News

எம்.டி.தம்பிராஜாவுக்கு "அதி சிறந்த விளையாட்டு வீரன்' கௌரவம் வழங்கப்பட்டது
Nov 18, 2007

எம்.டி.தம்பிராஜாவுக்கு "அதி சிறந்த விளையாட்டு வீரன்' கௌரவம் வழங்கப்பட்டது

[04 - November - 2007]

http://www.thinakkural.com/news/2007/11/4/images/news/sp-11.jpg

யாழ்ப்பாணம் உதைபந்தாட்ட பயிற்சியாளர் சங்கத்தின் தலைவரும் விளையாட்டுத் துறையில் பல பதவிகளை வகித்த பிரபல முன்னாள் சகலதுறை விளையாட்டு வீரருமான எம்.டி. தம்பிராஜா அதிசிறந்த விளையாட்டு வீரன் (VERSATILE SPORTSMAN)) என்னும் பட்டத்தை யாழ்.பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் பொ.பாலசுந்தரம்பிள்ளை வழங்கிக் கௌரவித்துள்ளார். இவ்வைபவம் அண்மையில் யாழ்.பலநோக்குக் கூட்டுறவுச் சங்க கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இவ்வைபவத்தில் தம்பிராஜாவினால் எழுதப்பட்ட "உலகளாவிய விளையாட்டுகள்' என்னும் புத்தகத்தை உபவேந்தர் பொ.பாலசுந்தரம்பிள்ளை வெளியிட்டு வைத்தார். இந்த நூல் தம்பிராஜாவினால் எழுதப்பட்ட 14 ஆவது நூல் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதுபற்றி எம்.டி.தம்பிராஜா (வயது 65) கருத்துத் தெரிவிக்கையில்;

நான் ஆரம்ப காலத்தில் தெல்லிப்பழை யூனியன் கல்லூரியில் கல்வி கற்றேன். அப்போது கல்லூரி அதிபராக இருந்த ஐ.பி.துரைரத்தினம் எனது விளையாட்டின் வளர்ச்சிக்கு பெரும் ஆதரவு வழங்கினார். இக்காலகட்டத்தில் வடமாகாண பாடசாலைகள் கிரிக்கெட் தெரிவு அணியிலும் , உதைபந்தாட்டத் தெரிவு அணியிலும் அங்கம் வகித்து விளையாடினேன்.

இதன் பின்பு உயர்கல்வியை வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியில் கற்றேன். இக்கல்லூரியின் அப்போதைய அதிபர் ராஜன் கதிர்காமர் எனது விளையாட்டுத் துறையின் வளர்ச்சிக்கு ஆக்கமும் ஊக்கமும் வழங்கினார்.

கல்லூரிப் படிப்பு முடிவடைந்ததும் இலங்கை விமானப்படையில் சேர்ந்து கொண்டேன். தடகளம் , உதைபந்தாட்டம் , கிரிக்கெட் , ஜூடோ , கராத்தே , கரப்பந்தாட்டம் ஆகிய விளையாட்டுத் துறைகளில் நான் சிறந்து விளங்கியதனால் விமானப் படையின் உதைபந்தாட்ட அணிக்கும், கிரிக்கெட் அணிக்கும் தலைமை தாங்கும் சந்தர்ப்பத்தை அப்போது விளையாட்டுத்துறைக்கு பொறுப்பாக இருந்த கு?ப் கப்டன் டீ.பி.எஸ்.வீரரட்ண எனக்கு வழங்கினார்.

விமானப்படையில் இருந்து விலகிய பின்பு விளையாட்டு அமைச்சில் இணைந்து கொண்டேன். யாழ்.மாவட்ட விளையாட்டு அதிகாரியாகக் கடமை ஆற்றிய காலத்தில் நான் லண்டன், ஜேர்மனி ஆகிய நாடுகளுக்குச் சென்று உதைபந்தாட்டம் உட்பட சில விளையாட்டுத் துறைகளில் டிப்ளோமா பட்டம் பெற்று நாடு திரும்பினேன்.

விளையாட்டு அமைச்சில் இருந்து ஓய்வு பெற்றபின்பு யாழ். நகருக்கு வந்து பல விளையாட்டுச் சங்கங்களில் காரியதரிசி, தலைவர் பதவிகளை வகித்ததுடன் உதைபந்தாட்ட பயிற்சியாளர் சங்கத்தை புதிதாக ஸ்தாபித்து பல இளம் உதைபந்தாட்ட பயிற்சியாளர்களை உருவாக்கி சான்றிதழ்களும் வழங்கி வருவதுடன் விளையாட்டு சம்பந்தமான பல நூல்களையும் காலத்துக்கு ஏற்ற முறையில் வெளியிட்டும் வருகின்றேன்.

எனது இவ்வாறான சேவைகளைப் பாராட்டி "அதிசிறந்த விளையாட்டு வீரன்' என்ற கௌரவப்பட்டம் வழங்கப்பட்டதையிட்டு நான் தற்போது பெரும் மகிழ்ச்சி அடைகின்றேன் என்று தம்பிராஜா தெரிவித்தார்.