News
தெல்லிப்பழை யூனியன் கல்லூரி மாணவர்கள் பாதிப்பு
Sep 17, 2007
வலி, வடக்கில் அதியுயர் பாதுகாப்பு வலயத்தில் இயங்கி வரும் தெல்லிப்பளை யூனியன் கல்லூரி மாணவர்கள் படையினரின் செயற்பாடு காரணமாக தினமும் காலதாமதமாக பாடசாலைக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக, பெற்றோர்கள் கவலை தெரிவித்துள்ளனர். காலை வேளையில் பாடசாலைக்குச் செல்லும் மாணவர்கள் தெல்லிப்பழையிலுள்ள இராணுவ காவலரண் பகுதியில் வைத்து அனைத்து மாணவர்களும் சோதனைக்கு உள்ளாக்கப்படும் போது ஏற்படும் காலதாமதத்தினால் 9.00 மணிக்கே பாடசாலைக்குச் செல்லவேண்டிய பரிதாப நிலைக்கு மாணவர்கள் உள்ளாவதாகத் தெரிவிக்கப்படுகிறது. எனினும், பிற்பகல் 2மணிக்கே பாடசாலை அனைத்து கல்விச் செயற்பாடுகளும் முடிக்கப்பட வேண்டுமென இராணுவத்தினர் உத்தரவிட்டுள்ளனர். இதனால், மாணவர்களின் கல்வி செயற்பாட்டு நடவடிக்கைகள் யாவும் பெரிதும் பாதிக்கப்படுவதாக, பெற்றேர்கள் கவலை தெரிவித்துள்ளனர். எனவே, சம்பந்தப்பட்ட வலயக் கல்விப் பணிப்பாளர் படைத் தரப்பினருடன் தொடர்பு கொண்டு மாணவர்களின் கல்விச் செயற்பாட்டு நேரத்தை சோதனை நடவடிக்கையில் விரயம் செய்யாது காலை நேரத்தில் எட்டு மணிக்கு முன்னதாக, மாணவர்களை சோதனைக்குட்படுத்தி, பாடசாலை செல்வதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர்.
by Athirady